$36 பில்லியன் டொலர்களை கொண்டுவருவதற்கான திட்டம் எம்மிடம் உள்ளது..

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறனுள்ள வேலைவாய்ப்புகளை மேலும் வலுவாக மேம்படுத்துவதற்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும், மூலோபாய முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளுடன் இணையவழி (virtual) சந்திப்ப ஒன்றை நடாத்தினார்.
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சந்தைகளில் நிறுவப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தக மற்றும் பரந்த பொருளாதார தேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
சந்தை மேம்பாடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் சர்வதேச வணிக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுவது உள்ளிட்ட தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் (NEDP) இலக்குகளுக்கு ஏற்ப தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) கண்காட்சிக்காக அதிக சர்வதேச பங்களிப்பைப் பெறுதல், இலங்கைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை அணுகலை விரிவாக்குதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்த்தல், இலங்கையை முன்னனி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் மற்றும் திறனுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அடையாளம் காணுதல் குறித்தும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி) திருமதி கில்மா தஹநாயக்க, பதில் வர்த்தக பணிப்பாளர் நாயகம் சோமசேன மஹதிவுல்வெவ உட்பட அமைச்சினதும் வர்த்தகத் திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஒவ்வொரு வர்த்தக அதிகாரிகளும் தாங்கள் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஆண்டின் எஞ்சிய காலத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர்.



