உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.. தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.. இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் – தி இந்து (The Hindu)

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறும், தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகளை முழுமையாக அமல்படுத்துமாறும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ‘தி இந்து’ (The Hindu) செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இந்திய வெளியுறவுச் செயலாளர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்தச் செய்தித் தாள் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக ‘டிட்வா’ (Ditwah) புயலுக்குப் பிறகு இலங்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக இந்தியா வழங்கும் உதவிகள், எரிசக்தித் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை புதுப்பித்தல் ஆகிய விஷயங்கள் குறித்து இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் அடையாள திட்டத்தை விரைவுபடுத்துதல், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முகமுறையை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாகாண சபை தேர்தல் குறித்து எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பது, இரு தரப்பினரின் முன்னுரிமைகளில் உள்ள வேறுபாடுகளைக் காட்டுவதாக ‘தி இந்து’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை ஜனாதிபதி கோரியுள்ளதாகவும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக் காலமும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முடிவடைந்த நிலையில், அன்றைய அரசுகள் பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலைத் தள்ளிப் போட்டன. தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக உறுதியளித்திருந்த போதிலும், தற்போதைய அரசு பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இத்தேர்தல் வாக்குறுதி தாமதமாவது குறித்தும் பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



