கத்தோலிக்க போதனைகளின் கீழ் மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது: கர்தினால்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை கொழும்பு மறைமாவட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தாம் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு மறைமாவட்டம் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையாக நிற்கிறது என்றும், இத்தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளையும், அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அடையாளம் காண்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய மறைமாவட்டம், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், 2018ஆம் ஆண்டின் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தப்பட்ட மறைக்கல்விச் சுருக்கத்தின் (Catechism of the Catholic Church) 2267ஆம் பந்தியின் படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. எனவே, மரண தண்டனையை விதிப்பதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அது குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், அதன் பரிசீலனைகளிலோ அல்லது தீர்மானங்களிலோ தலையிடும் எண்ணம் இல்லை என்றும் மறைமாவட்டம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, நிறுவப்பட்ட சட்ட அமைப்புகளின் மூலம் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பொது அமைதியைப் பேணும்போது மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலின் அழைப்பையும் நினைவுகூர்ந்துள்ளது.



