News

இலங்கை மக்களுக்கு சொந்தமான மில்கோ பால் நிறுவனம் 1.49 பில்லியன் ரூபா நிகர லாபத்தைப் பதிவு செய்து வரலாற்று சாதனை – நஷ்டம் காரணமாக சென்ற அரசில்  தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிறுவனம் இலாபத்தை ஈட்டும் நிறுவனமாக மாறியது

இலங்கை மக்களுக்கு சொந்தமான பால் உற்பத்தியாளரான மில்கோ (பிரைவேட்) லிமிடெட், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 1.49 பில்லியன் ரூபா நிகர லாபத்தைப் பதிவு செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க நிதித் திருப்பத்தை எட்டியுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்த மீட்சியின் மூலம் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டங்களை நிறுத்தவும், கடன்களை அடைக்கவும், முன்னோடியில்லாத வகையில் நிதிச் சலுகைகளை வழங்கவும் முடிந்தது என்று பிரதி அமைச்சர் கருணாரத்ன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


2025 டிசம்பர் 31 அன்று, மில்கோ நிறுவனம் தனது 1,228 ஊழியர்கள் அனைவருக்கும் தலா 75,000 ரூபா செயல்திறன் ஊக்கத்தொகையை வழங்கியது. அத்துடன், 21 ஆண்டுகளில் முதன்முறையாக, 22,000 பால் பண்ணையாளர்களுக்கு 180 மில்லியன் ரூபா லாபப் பகிர்வு ஊக்கத்தொகையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.


மில்கோ நிறுவனம் முன்னர் 3.5 பில்லியன் ரூபா வங்கிக் கடன்களையும், பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் ரூபா நிலுவைத்தொகையையும் கொண்டிருந்ததாகவும், தற்போது அனைத்துக் கடன்களும் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


நீண்டகாலமாகத் தாமதப்பட்டிருந்த படல்கம பால் தொழிற்சாலைத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், அது நாளொன்றுக்கு 200,000 லீட்டர் பால் வரை பதப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.


நிகவெரட்டியவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பண்ணையைத் தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் கறவைப் பசுக்கள் மற்றும் காளைகளை வழங்குவதற்காக மேலதிகமாக 1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button