News

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் கல்முனையில் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்

நூருல் ஹுதா உமர்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் இதனால் ஏற்பட்டுள்ள நல்லிணக்க பிளவுகள் குறித்தும் ஆராயும் வகையில் கல்முனையில் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எல். முஹம்மட் முர்ஷித் (முப்தி) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இதனால் தேசிய ரீதியாக ஏற்பட்டுள்ள நல்லிணக்க பிளவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வைத்தியசாலை விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே கலந்துரையாடல்களை உயர்மட்டங்களில் முன்னெடுத்து சுமுகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

வைத்தியசாலை என்பது அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் அரச நிறுவனமாக இருப்பதால், அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் உரிமைகள், அரச சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அவசியங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் இவ்விவகாரம் பயன்படுத்தப்படாமல், பொறுப்பான முறையில் அணுகப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதேச மக்களின் முக்கியமான சுகாதார நிறுவனமாக உள்ள நிலையில், அதன் சேவைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதுடன், தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பல்வேறு கிளைகளினதும் தலைமை நிர்வாகிகள், கல்முனை பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், துறைசார் புத்திஜீவிகள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனை மேற்கொண்டு வழிநடத்த புத்திஜீவிகள், துறைசார் வல்லுநர்களை கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

Recent Articles

Back to top button