News

முஸ்லிம் ஊழியர்களின் சீருடை விவகாரம்… ‘சீலைக்கு மேல் சொறியாமல்’ இந்த பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வொன்று காணப்பட வேண்டும் ; ரவூப் ஹக்கீம்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் சீருடைப் பிரச்சினை தொடர்பில், பொது இடமொன்றில் தான் தெரிவித்த ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற கருத்து குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.


பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தைக் கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் பேசுகையில், “தாதியர்கள் மாத்திரமின்றி, சுகாதாரத்துறை உள்ளிட்ட ஏனைய அனைத்துத் துறைகளிலும் சீருடைக்கு மேலதிகமாக அவர்களின் மத, கலாசாரத்தைப் பேணும் வகையில் உடை அணிந்து வருவதற்குரிய கொள்கை ரீதியிலான முடிவை அரசாங்கம் எடுத்துவிட்டது என்ற ஒரு செய்தியையே நாங்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு இதுதான் மூல காரணமாக இருக்கிறது. அதனால், ‘சீலைக்கு மேல் சொறியாமல்’ இந்த பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வொன்று காணப்பட வேண்டும்.

அதேநேரம், ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்று இந்தப் பிரச்சினை தொடர்பில் நான் பொது இடமொன்றில் தெரிவித்திருந்தேன். இது தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

நான் இவ்வாறு தெரிவித்தமைக்குக் காரணம், இந்தச் சீருடைப் பிரச்சினை உள்ளூர் நிர்வாகத்தினால் ஏற்பட்டதாகும். எனவே, அந்த உள்ளூர் நிர்வாகமாகிய முள்ளை எடுப்பதற்கு, அரச மேலிடம் என்ற மற்ற முள்ளை பாவித்தே அதனை எடுக்க வேண்டும். அதனைத்தான் நான் கூறினேன்.

எனவே, அரச மேலிடத்தின் உண்மையான தலையீடு இந்த விடயத்தில் இருந்திருந்தால், இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு இருக்கும் ஒரே வழி, ‘சுற்றறிக்கையில் இருக்கும் அந்த விடயத்தை நீக்கிவிடுவதற்கு நாங்கள் கொள்கை ரீதியில் தீர்மானித்துவிட்டோம்’ என்பதை அறிவிப்பதாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்குச் சில நாட்கள் சென்றாலும், அதனைத் தொடங்கியே அறிவித்திருந்தால், இது தொடர்பான பதற்ற நிலையைக் குறைத்திருக்கலாம். என்றார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button