News

வேலைக்காக இஸ்ரேல் சென்ற சுமார் 7,000 இலங்கையர்கள், அங்கு வேறு வேலைகளில் ஈடுபட்டு, அகதி அந்தஸ்து கோரியதை அடுத்து தற்போது நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலை..

இஸ்ரேலுக்குச் சென்ற பணிப் பிரிவுகளுக்கு வெளியே வேறு வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக, நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுமார் 7,000 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இஸ்ரேலில் தற்போது சுமார் 30,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க என்பவரால் இவ்விடயம் எழுப்பப்பட்டது.


குறிப்பிட்ட துறைகளில் பணிக்காக இஸ்ரேல் சென்ற சுமார் 7,000 இலங்கையர்கள், பின்னர் வேறு வேலைகளில் ஈடுபட்டு, அகதி அந்தஸ்து கோரியதை அடுத்து தற்போது நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தசநாயக்க கூறினார்.


இதேபோன்ற சூழ்நிலைகளில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தலையீடு செய்ததாகக் குறிப்பிடப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அரசாங்கம் இவர்கள் சார்பில் தலையிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த ஹேமச்சந்திர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தகவல்களை மேற்கோள் காட்டி, கடந்த அரசாங்கத்தின் கீழ் சிலர் பணியமர்த்தப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட விதம் குறித்து கவலை வெளியிட்டார்.


முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, SLBFE க்கு ஒரு கடிதம் அனுப்பி, தம்மால் வழங்கப்பட்ட பட்டியலை இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபைக்கு (PIBA) அனுப்புமாறு பணிப்புரை விடுத்திருந்ததாக அவர் கூறினார்.
தேவையான நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான தொழிலாளர்களை SLBFE ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த போதே இது நடந்துள்ளதாக ஹேமச்சந்திர தெரிவித்தார்.


பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, விவசாயத் துறைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களில் சிலர் இலங்கையை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர், தங்களது வேலைப் பிரிவுகள் குறித்து சரிவர தெளிவுபடுத்தப்படவில்லை.
“இது புலம்பெயர் தொழிலாளர்களின் தவறு என்று நான் நம்பவில்லை,” என்று ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.


அதன்பின்னர் அந்தத் தொழிலாளர்களிற் சிலர் வேறு இடங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்று அகதி அந்தஸ்து கோரியதாக அவர் கூறினார். பின்னர் இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களின் நிலையைச் சீரமைக்க ஒரு பொதுமன்னிப்புக்காலத்தை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்கு அன்றைய அரசாங்கம் அந்தப் பொதுமன்னிப்புக்காலத்தில் தேவையான தலையீடுகளைச் செய்யத் தவறிவிட்டதாக ஹேமச்சந்திர குற்றம் சாட்டினார்.


மேலும், ஏற்கனவே அங்குள்ள தொழிலாளர்களுக்குப் பதிலாக சுமார் 6,000 தொழிலாளர்களைக் கொண்ட மற்றொரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்ப அன்றைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மாற்றுக்குழுவை அனுப்புவதற்கான திட்டங்களுடன் தொடர்புபடுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக பிரதி அமைச்சர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் ஏனைய நபர்கள் மீதும் அவர் இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஹேமச்சந்திர தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button