News

சுகாதாரத்துறையும் பாதுகாப்புத் துறை போன்றதே… இவற்றில் சீருடை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமெனில், அதற்கென தனியான நிருவாகப் பொறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர, சமூக வலைகளில் வீண் விவாதங்களைக் கிளப்புவது ஒருபோதும் உண்மையான தீர்வைத் தராது.

விளம்பர அரசியலை தவிர்த்து, நிரந்தர தீர்வுக்கான அனைத்து தரப்புகளும் ஒன்றினைய வேண்டும்!

சுகாதார பணியாளர்கள் சீருடைப் பிரச்சினையை நேரடியாக ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் எடுத்துச் சென்று வீண் விவாதங்களைக் கிளப்புவது ஒருபோதும் உண்மையான தீர்வைத் தராது.

மாறாக, அது நிலைமையை மேலும் தீவிரமாக்கி, தேவையற்ற கொந்தளிப்பையே உருவாக்கும். உணர்வுபூர்வமான விவகாரங்களைப் பகிரங்க மோதல்களாக மாற்றுவது, தீவிர கொள்கை சார்ந்த அமைப்புகள் மற்றும் சுயநல சக்திகள் இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி இனமுரண்பாடுகளை வளர்ப்பதற்கே வழியமைக்கும்.

சில அரசியல் சக்திகளும் மக்கள் பிரதிநிதிகளும் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது தற்காலிகப் பிரபல்யத்துக்காகவோ இவ்விவகாரத்தைப் பயன்படுத்துவதைத் தீர்க்கமாகத் தவிர்க்க வேண்டும். மக்கள் மத்தியில் ஆதரவு தேடுவதற்காக அரசு நிறுவனங்களுக்கெதிரான விமர்சனங்களை அலைக்கழிப்பது, அந்நிறுவனங்களுடன் நமது சமூகம் கொண்டுள்ள இணக்கமான நிர்வாக உறவைச் சீர்குலைத்து, முழு அமைப்பையும் மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.

முக்கியமாக, வலுவான தொழிற்சங்கக் கட்டமைப்புகளைக் கொண்ட பொதுச் சேவை விவகாரங்களைக் கையாளும் போது, மிகுந்த நிதானமும் எச்சரிக்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் ஆடை விவகாரத்தின் போது மேற்கொண்ட அணுகுமுறையைப் போல, இந்தப் பிரச்சினையை அணுகுவது ஆபத்தானது.

சீருடை தொடர்பான நடைமுறைகளும், அரச ஊழியர்களுக்கான ஆடை விதிகளும் இரு வேறுபட்ட அம்சங்களாகும். சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை போன்றவற்றின் சீருடைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமெனில், அதற்கென தனியான நிருவாகப் பொறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நினைத்த மாத்திரத்தில் அவற்றை மாற்றிவிட முடியாது.

தற்போது சுகாதாரத்துறையில், உத்தியோகபூர்வமற்ற முறையில் பெறப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் தமது சீருடைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு பணியாற்றி வரும் சந்தர்ப்பத்தில், நமது தவறான முன்னெடுப்புகள் அங்கு அவர்களுக்கு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்ளாமல் அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளைத் திணிக்க முயல்வது, அந்தந்தத் துறைகளுக்குள் எதிர்பாராத சவால்களையே உருவாக்கும். எனவே, இவ்விவகாரத்தை முதிர்ச்சியுடனும், நிதானத்துடனும், அறிவுப்பூர்வமான அணுகுமுறையுடனும் கையாள வேண்டியது அத்தியாவசியத் தேவையாகும்.

தொழிற்சங்கங்களும் துறைசார் அமைப்புகளும் வலுவாக இருக்கும் இடங்களில், அவை தொடர்பான பிரச்சினைகள் மிகுந்த பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட வெளிப்பாடுகளைத் தவிர்த்து, தெளிவான ‘மூலோபாய நடவடிக்கை திட்டத்தின்’ (Strategic Action Plan) மூலம் உத்தியோகபூர்வ மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே, ஆக்கப்பூர்வமான மற்றும் சுமுகமான சூழலை உருவாக்க உதவும்.

மிக முக்கியமாக ஆளுங்கட்சியின் தலைமைத்துவத்தைப் பயன்படுத்துவதோடு, எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்று, இவ்விவகாரத்திற்கு ஒரு நிரந்தரமான மற்றும் சட்டப்பூர்வமான தீர்வைக் காண இராஜதந்திர ரீதியில் செயல்பட வேண்டும். எனவே, இவ்விவகாரத்தில் களமிறங்குபவர்கள் முதற்கட்டமாக அரசியல் அணுகுமுறைக்கு ஊடாக  நிர்வாக மட்டத்திலான தீர்வுகளுக்கு அடித்தளமிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் நாம் மூலோபாய ரீதியாகச் செயல்படுவதே சிறந்ததாகும். அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் மூலம் சமூக இலக்குகளை அடைவது என்பது வெறும் பிரச்சாரங்களால் மட்டும் சாத்தியமாகாது. இத்தகைய சூழ்நிலைகளில், மேலோட்டமான பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நிரந்தரத் தீர்வை நோக்கி அனைத்துப் பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதே நிலையான வெற்றியைத் தரும்.

நிலையானதொரு தீர்வை எட்டுவதற்கு, அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா (ACJU) உடனடியாக முன்வந்து, தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். தலை மற்றும் கீழ் உடலை மறைப்பது இஸ்லாத்தில் ஒரு மதக் கடமை (Religious Obligation) என்பதை அந்த அறிக்கை முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அதிகளவிலான முஸ்லிம்கள் அரச துறைகளிள் இணைந்து வரும் நிலையில், அரச நிறுவனங்களின் சீருடை விதிமுறைகள் அரசியலமைப்பின் 10, 12 மற்றும் 14(1)(e) பிரிவுகளுக்கு அமைய கண்டிப்பாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

ஜமிய்யத்துல் உலமாவினால் சட்டரீதியாகப் பலப்படுத்தப்பட்ட இத்தகைய மத ரீதியிலான நிலைப்பாடு முன்வைக்கப்படும் போது, அரசியல் தலைவர்கள், உரிமைப் போராட்டக் குழுக்கள் மற்றும் அழுத்தம் கொடுக்கும் அமைப்புகள் (Lobbyists), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் திறம்பட பேச்சுவார்த்தை நடத்தி, பொதுத்துறை சீருடைச் சுற்றறிக்கைகளில் தேவையான திருத்தங்களைப் பெறுவதற்கு வலுவான அரசியலமைப்பு மற்றும் சாதகமான அடித்தளம் கிடைக்கும்.

இந்நடவடிக்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், நீதிமன்றத்தை நாடி நமது உரிமைகளை வென்றெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். நமது தற்போதைய அணுகுமுறைகளும் நடவடிக்கைகளும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தருவதற்குப் பதிலாக, இந்த ஊழியர்களுக்கு இடமாற்றத்தை மட்டுமே தீர்வாக வழங்கியுள்ளன. இவ்விடத்தில், நாம் தோல்வியையே சந்தித்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நமது அணுகுமுறையில் உள்ள தவறுகளை அரசின் அலட்சியப் போக்கு என்று மட்டும் கூறி நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன் ஊடக மாநாட்டில் இந்த விடயம் சம்பந்தமாக சுகாதார அமைச்சரின் தெளிவுகள் வரவேற்கத்தக்கது.

வசீர் முக்தர்
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button