இந்தியா எங்களுக்கு 5 பில்லியன் டாலர் வழங்க உறுதியளித்துள்ளது – டி.பி. சரத்
அனுராதபுரத்தின் வரலாற்று நகரத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களுக்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இந்திய அரசு இலங்கையுடன் மிக நெருக்கமாகவும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே நிலவும் நல்ல இராஜதந்திர உறவே இந்த உதவிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்திய அரசு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாகக் கூறிய பிரதி அமைச்சர், யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை உருவாக்கம் மற்றும் அனுராதபுரத்தின் பழமையான நகரத்தை நவீனமயமாக்குதல் போன்ற சிறப்பான திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.
“எமது நாட்டு மக்களின் பொது நலனுக்காக இந்திய அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்பைச் செய்து வருகிறது. அனுராதபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தை மீண்டும் புனரமைக்க அவர்கள் வழங்கும் இந்த ஆதரவை நாங்கள் மிகவும் உயர்வாக மதிக்கிறோம்,” என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



