இந்த அரசாங்கம் மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறும், மக்கள் இறையாண்மைக்கு இடமளிக்காத, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிக்காத ஒரு அரசாங்கமாகவே செயல்படுகிறது ; சஜித்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையெனில் 22 க்கு ஏன் அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மகளிர் சக்தியின் இரத்தோட்டை தொகுதி ஸ்தாபக கூட்டம் இன்று (06) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு, நீதியின் ஆட்சி சீரழிந்து செல்கின்றது.
நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் நீதியின் ஆட்சி குறைந்திருக்கும் நாட்டில், 22 ஆவது திருத்தத்தின் மூலம் அது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், அப்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமெனக் கூறினார்.
ஆனால் இன்று சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர்.
அன்று 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தபோது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியதைப் போல, 22 ஆவது திருத்தத்திற்கும் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமல்லவா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறும், மக்கள் இறையாண்மைக்கு இடமளிக்காத, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிக்காத ஒரு அரசாங்கமாக காணப்படுகின்றது.
இந்த சர்வாதிகார போக்கு இளைஞர் கழக தேர்தல் மற்றும் சிவில் பாதுகாப்புப்புக் குழுத் தேர்தல்களில் இருந்துதான் தொடங்கியது. பெலவத்தையின் பட்டியலின்படி உறுப்பினர்களை நியமித்த இந்த அரசாங்கம் ஜனநாயகத்தைச் சீரழித்துவிட்டது.
மக்களின் உரிமைகளைப் பறித்து, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வர முற்படுகின்றது.
மேலும் பல பொய்களை அள்ளிக் கொட்டவே ஜனாதிபதி இந்நாட்களில் நாடெங்கும் பேரணிகளை நடத்துகிறார்.
பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டு இறுதியில் மேலும் பொய்களைக் கூறும் பொய் பேரணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டுமானால் பொய் பேரணிகளை நடத்துவதை விட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



