News

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான இலஞ்ச வழக்கில், அவருக்கு குறைந்த தண்டனையைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து 750,000 ரூபா இலஞ்சம் பெற்ற நீதிமன்ற உதவியாளர் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில், அவருக்கு குறைந்த தண்டனையைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து ரூ. 750,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சமர்ப்பித்த குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க போதரகம் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜி.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தொலைபேசி மூலம் நீதிபதியைத் தொடர்புகொண்டு வழக்கு குறித்து பேச முயன்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வழக்குகள் குறித்து பேசுவதற்கு அவருக்கு உள்ள அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, அத்தகைய உரையாடலில் ஈடுபட மறுத்துவிட்டார்.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும், தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அத்தனகல்ல நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற புத்தகக் கட்டுநர் (book binder) ஒருவர் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சரும் அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபையின் முன்னாள் தலைவருமான குணவர்தன, சபைக்கு சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஜூன் மாதம் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தத் தண்டனையை 16 ஆண்டுகள் காலப்பகுதியில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button