இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் எதற்கும் இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அனுர உறுதியளித்தார்.. – இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று உறவுகளையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பையும் செழிப்பையும் உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் இங்கு விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை ஜனாதிபதியிடம் தெரிவித்த ராஜ்நாத் சிங், இலங்கையின் மிக நெருங்கிய நண்பன் மற்றும் அண்டை நாடு என்ற ரீதியில் எந்தவொரு அவசர காலத்திலும் முதன்முதலில் உதவும் நாடாக ஆதரவளிப்பது இந்தியாவின் கடமை எனக் கருதுவதாகவும், அந்த ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்தில் தாக்கிய ‘தித்வா’ சூறாவளி பேரழிவின் போது “சாகர் பந்து” செயல்பாட்டின் கீழ் இந்தியா வழங்கிய அவசர நிவாரண உதவிகளுக்கும், தீவு முழுவதும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக புதுடில்லியிடமிருந்து கிடைத்த விரிவான மறுவாழ்வுத் தொகுப்பிற்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பிற்கு இணையாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கையெழுத்திடப்பட்டன. அதன்படி, இந்திய அரசாங்கத்தின் முழுமையான நன்கொடையின் கீழ் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ‘L70’ ரக வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் 6 ஐ அதிநவீன நிலைக்கு மேம்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கு முன்னரும் இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்குவதன் மூலம் நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு கணிசமாக வலுப்படுத்தப்படும்.
மேலும், இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே கல்விப் புலத்தில் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையே வருடாந்த இளைஞர் பரிமாற்ற திட்டங்களை முறைப்படுத்தும் புதிய ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், இந்திய ஆயுதப்படைகளால் அமைக்கப்பட்ட மூன்று ‘பெய்லி’ (Bailey) ரக பாலங்களை இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாகத் திறந்து வைப்பதும் இரு தலைவர்களின் தலைமையில் இங்கு இடம்பெற்றது.

