News

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விடுதலையைக் கோரும் இலங்கையிலுள்ள ரொஹிங்கியா அகதி

இலங்கையில் வாழும் ரொஹிங்கியா அகதி ஒருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வில் நேரடியாக வேண்டுகோள் விடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொஹிங்கியா அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கை ‘பேக்ஸ் ரொமனா’ (Pax Romana) அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்டது.

மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அவர், விடுதலை வழங்கப்படும் வரை, குழந்தைகள் உட்பட ரொஹிங்கியா மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR), வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தாங்கள் அனுபவித்த துன்பங்களும் அனுபவங்களும் தங்கள் அகதி அந்தஸ்தை நிரூபிப்பதாகக் கூறிய அவர், தங்களை “சட்டவிரோத குடியேறிகள்” என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

2024 டிசம்பரில் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் கடலில் தவித்த ரொஹிங்கியா அகதிகளை மீட்ட இலங்கை கடற்படைக்கு அவர் நன்றி தெரிவித்த அதேவேளையில், வாழ்வாதாரம், இருப்பிடம், உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற அடிப்படை உரிமைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

குடியுரிமை அற்றவர்களாகவும் இனப்படுகொலைக்கு ஆளானவர்களாகவும் இருக்கும் ரொஹிங்கியா மக்களின் அவல நிலையை சுட்டிக்காட்டிய அவர், வேறு எந்த நாட்டிலும் மறு குடியமர்த்தப்பட முடியாத அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், ரொஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது உரையின் சிறு பகுதி:

“என் பெயர் முகமது அன்வர். நான் இலங்கையில் வாழும் ஒரு ரொஹிங்கியா அகதி. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் மியான்மர் தொடர்பான சுயாதீன விசாரணை பொறிமுறையின் அறிக்கைகள் குறித்து கவனத்தை ஈர்க்கிறேன்.

2022 டிசம்பரில் யாழ்ப்பாணக் கடலில் இருந்து சுமார் 105 ரொஹிங்கியர்களை மீட்ட இலங்கை கடற்படைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். பானந்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறியுள்ள அனைத்து ரொஹிங்கியா அகதிகளுக்கும் வாழ்வாதாரம், இருப்பிடம், உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

2024 டிசம்பரில், இரண்டு படகுகள் மூழ்கி ஆறு பேர் உயிரிழந்த மிகக் கடினமான கடல் பயணத்திற்குப் பிறகு, 57 குழந்தைகள் உட்பட சுமார் 116 ரொஹிங்கியர்கள் இலங்கையை வந்தடைந்தனர். அவர்களின் துன்பங்கள், வன்முறைகள், இடம்பெயர்வு மற்றும் அச்சம் ஆகியவை அவர்களின் அகதி அந்தஸ்தை நிரூபித்த போதிலும், இந்த குழுவினர் இலங்கையில் 20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான மனிதநேய உதவிகளே கிடைக்கின்றன.

எனவே, அவர்களை விடுதலை செய்யுமாறும், UNHCR, வழக்கறிஞர்கள், மனிதநேய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தடைகளின்றி அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறும், அகதிகளை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ரொஹிங்கியாக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளதாகவும், மியான்மரில் இன்னும் இருக்கும் மக்கள் இனப்படுகொலை அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உண்மை கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாங்கள் ரொஹிங்கியா தேசியவாதிகள், நாங்கள் தாய்நாடற்ற மக்கள்.

அதன்படி, வேறு எந்த நாட்டிலும் மறு குடியமர்த்தப்பட முடியாத ரொஹிங்கியாக்கள் மற்றும் ஏனைய அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், எங்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.”

Recent Articles

Back to top button