75 ஆண்டுகளில் மிகக் கடுமையான ‘எல் நினோ’ காலநிலை இலங்கைக்கு…
இலங்கையில் தற்போது நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமையானது, 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் பதிவான மிகக் கடுமையான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 69 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இந்த காலநிலை நிலைமையானது ஒரு வலுவான ‘எல் நினோ’ நிலைமையாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 98 சதவீதம் என்ற மிகவும் உயர் மட்டத்தில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, கடந்த 75 ஆண்டுகளில் பதிவான அனைத்து எல் நினோ நிலைகளையும் விட அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் இம்முறை ஏற்படக்கூடும்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி சற்று குறையக்கூடும் என்றாலும், செப்டம்பர் மாத இறுதி முதல் நாடு முழுவதும் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
குறிப்பாக, உலகளாவிய கணிப்புத் தரவுகளின்படி, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெய்யும் மழைவீழ்ச்சி சாதாரண அளவை விட கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இவ்வாறு மழை பெய்தபோதிலும், நாட்டின் சுற்றுச்சூழல் வெப்பநிலை சாதாரண அளவை விட தொடர்ந்து உயர்ந்து காணப்படும் என்றும் அஜித் விஜயமான்ன மேலும் தெரிவித்தார்.



