முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் ஆடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளை ஜனாதிபதிக்கு கடிதம்
முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களைப் பாதிக்கும் மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை தொடர்பான விகாரங்களுக்கு அரசியலமைப்புக்கு ஏற்ற வகையில் நிரந்த தீர்வை காணக் கோரி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். முர்சித் (முப்தி) கையெழுத்திட்டுள்ள எட்டுப் பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற கல்முனைத் தொகுதியிலுள்ள முஸ்லிம் சமயத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட புத்திஜீவிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்தக் கடிதம் ஜனாதிபதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் ஆடைப் தொடர்பில் அடிக்கடி எழும் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்புக்கு ஏற்ற வகையில் நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



