சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் விகாரையிலிருந்து மாயம்…

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது காணாமல் போயுள்ளதாக ‘சண்டே ஐலண்ட்’ (Sunday Island) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக இராஜகிரிய, நாவலவில் அமைந்துள்ள அவரது விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சென்றிருந்ததாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஞானசார தேரர் தற்போது எங்கு தங்கியிருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என விகாரையில் உள்ள ஏனைய தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு வழங்கிய விசேட ஜனாதிபதி மன்னிப்பானது, சட்ட வலுவற்ற, தன்னிச்சையான மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையையும் இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறும் செயலாகும் என அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர், சுமார் ஒன்பது மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் 2019 மே மாதத்தில் குறித்த ஜனாதிபதி மன்னிப்புப் பெற்று விடுவிக்கப்பட்டார். தற்போதைய உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உரிய சட்ட மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.



