டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 170 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கோரிக்கை !!
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கடல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்களது செலவுகளை ஈடுசெய்யும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் உள்ள தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளன.
தற்போதைய சந்தை நிலவரத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிறுவனங்கள், தற்போது ஒரு லீற்றர் டீசலை விநியோகிக்கும் போது சுமார் 170 ரூபா நட்டத்தை சந்திப்பதாகத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவும், பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவும் என முன்னர் அரசாங்கம் வழங்கி வந்த மானியத்தை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தியமையானது, எரிபொருள் விநியோகஸ்தர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்த மானியங்கள் இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்துடன், எதிர்கால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப விலைகளில் திருத்தம் செய்யப்படாவிட்டால், தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பேணுவது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என அந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் இருப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள சில தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “டீசல் இல்லை” (No Diesel Available) என அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காண முடிகிறது.


