உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் கலந்தாலோசனை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவுகளை எடுக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
சூயஸ் கால்வாய்க்கு செல்லும் செங்கடலில் உள்ள பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) ஜலசந்தியின் இருபுறமும் உள்ள மூலோபாய பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளமை, உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோக வழிகளில் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடி காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ள நிலையில், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் 104 டொலர்களாகவும், WTI ரக கச்சா எண்ணெய் 100 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.
ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலைகளை ஒப்பிடுகையில், டீசல் விலையானது கடந்த ஏப்ரல் மாதம் பதிவான அதிகபட்ச அளவை விடவும் அதிகரித்துள்ளது. அத்துடன், பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளும் உச்ச அளவை எட்டியுள்ளன. இந்த விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இதுவரை அவசர பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் இந்த நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து அரசாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இந்த மாத இறுதியில் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில், இத்தகைய சவாலான உலகளாவிய பின்னணியில் இந்த திருத்தங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



