News

போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.. நாங்களும் திருத்தம் செய்ய வேண்டி வரும்…

உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் (மாற்றம்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அணுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்களிடையே எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வேகமாக உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டு சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே இன்னும் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள விலை இடைவெளிக்கு மத்தியில் நிறுவனங்களை நடத்திச் செல்வது பெரும் சவாலாக உள்ளது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவாக கலந்துரையாடி பொருத்தமான தீர்வை எட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கத்தின் முன் பல வழிமுறைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களைப் போல அரசாங்கம் தலையிட்டு குறிப்பிட்ட அளவு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது செலவுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிப்பது போன்ற முறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனியார் விநியோக நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தாலும், நுகர்வோர் மக்கள் மீதான சுமையைக் கருத்தில் கொண்டு விசேட கவனத்துடன் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வழக்கமான நடைமுறையின்படி ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக, அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளை சரியாக ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button