News

சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் THIHARIYA ENVIRONMENTAL SQUAD (திஹாரிய சுற்றுச்சூழல் படை) உறுப்பினர்கள் பாடசாலை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையும் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த “ரேடியோ மீலாத் 2026” சிறப்பு மீலாத் தின நேரடி நிகழ்ச்சி, அண்மையியல் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் THIHARIYA ENVIRONMENTAL SQUAD (திஹாரிய சுற்றுச்சூழல் படை) உறுப்பினர்கள் பாடசாலை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.

திஹாரிய பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், அத்தனகலை பிரதேச சபையுடன் இணைந்து இவ்வமைப்பு பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, எவ்வித கொடுப்பனவுகளையும் எதிர்பாராமல் தன்னார்வ அடிப்படையில் செயற்பட்டு வரும் உறுப்பினர்கள், பிரதேசத்தின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

திஹாரிய சுற்றுச்சூழல் படை முன்னெடுக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகள்

திஹாரிய சுற்றுச்சூழல் படையினால் முன்னெடுக்கப்படும் பணிகளில், குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு ஒலிபெருக்கி வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குதல், குப்பை சேகரிப்பு வாகனங்களின் வருகை தொடர்பில் மக்களுக்கு அறிவித்தல் மற்றும் அவை பயணிக்கும் பாதைகள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்களை வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன.

மேலும், GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பை சேகரிக்கும் வாகனம் தற்போது எந்தப் பகுதியில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு அறியச் செய்தல், பிரதேசத்தை அழகுபடுத்தும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களில் பங்கேற்பது மற்றும் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளையும் இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

திஹாரிய பிரதேசத்தை மேலும் அழகுபடுத்துதல், தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதல், கழிவு முகாமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவும் திஹாரிய சுற்றுச்சூழல் படை திட்டமிட்டுள்ளது.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி தன்னார்வ அடிப்படையில் சமூக நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் திஹாரிய சுற்றுச்சூழல் படையின் உறுப்பினர்களுக்கு அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியினால் வழங்கப்பட்டுள்ள இந்தக் கௌரவிப்பு, அவர்களின் சமூகப் பணிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புக்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button