எயார் பஸ் கொள்வனவில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்ற குற்றம் – நாமல் ராஜபக்ஷ நாளை 16 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்

ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்களைக் கொண்ட விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய விமான நிறுவனமொன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் 16 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஸ்ரீ லங்கா எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வாறு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவும் இணைந்து இச்சம்பவம் குறித்துக் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இரண்டு நிறுவனங்கள் இணைந்து இவ்வாறான விசாரணை ஒன்றை மேற்கொள்வது நீதித்துறையின் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். மேலும், இவ்விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்டமா அதிபர் தமக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘எயர் பஸ்’ (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச ஊழல் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013 ஆம் ஆண்டில் குறித்த ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவினால் பெறப்பட்டதாகக் கூறப்படும் குறித்த இலஞ்சப் பணம், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் சார்பில் இச்சம்பவத்தைக் கண்காணித்து வரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷவைப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, சந்தேகநபரின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



