றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மட்டக்களப்பு மாவட்ட சாதனை மாணவர்களுக்கு கௌரவம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மட்டக்களப்பு மாவட்ட சாதனை மாணவர்களுக்கு கௌரவம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுத் தொடர், இம்முறையும் நாடளாவிய ரீதியில் “AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (12) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான Eng. றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
விஷேட பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கணக்கியல் பேராசிரியர். எம்.சி. அப்துல் நசார் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஹலால்டீன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், தொழிலதிபர் தினேஸ்குமார் உள்ளிட்டோருடன், பாடசாலை அதிபர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்வி பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் கல்வி முயற்சிகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



