73 வயதில் போலி உறுதிகள் செய்து காணிகளை ஏப்பம் விட்ட நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது

கொழும்பு 07, பார்ன்ஸ் பகுதியில் உள்ள சொத்துக்களின் போலி உறுதிகள் தொடர்பான நிதியியல் மோசடி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
இரண்டு சொத்துக்களுடன் தொடர்புடைய பணத்தை மோசடி செய்யும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் விசாரணைப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையின் அடிப்படையில், அதிகாரிகள் நேற்று களுத்துறை நகரில் சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய நபராவார். இவர் போலி உறுதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் சமர்ப்பித்து, அச்சொத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்து அப்பணத்தை மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.



