காலம் கடந்துவிட்டது.. மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.. – ஜனாதிபதிக்கு அறிவிக்கும் தேர்தல் ஆணையம்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய காலம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் கடந்துவிட்டமையால், குறித்த வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையகம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
தெரண தொலைக்காட்சி சேவையின் ‘பிக் ஃபோகஸ்’ (Big Focus) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தேர்தல் ஆணையாளர் ஜெனரல் ரசிக பீரிஸ் இதனை வெளிப்படுத்தினார்.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதிச் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் ஆணையாளர் ஜெனரல் இங்கு குறிப்பிட்டார்.
குறித்த தெரிவுக்குழுவின் முன்பு தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் பல முறை அழைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு முறைகளின் கீழ் தேர்தலை நடத்தக்கூடிய முறைகள் தொடர்பான அவதானிப்புகள் மற்றும் அறிக்கைகளை ஆணையகம் ஏற்கனவே அந்த குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் ஜெனரல், தேர்தல் தாமதமாவதற்கான சட்ட சிக்கல் குறித்து பின்வருமாறு விளக்கினார்:
“மாகாண சபைத் தேர்தல் சட்டம் முன்பு திருத்தப்பட்டபோது, அதில் இருந்த அனைத்து அட்டவணைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்களிக்கும் முறை, வாக்குச்சீட்டின் மாதிரி மற்றும் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கியமான சட்ட விதிகள் ரத்தாகிவிட்டன. அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்து, தொடர்புடைய சட்ட இடைவெளிகளைப் பாராளுமன்றம் மூலம் திருத்துவதானால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையகம் முழுமையான தயார்ப்படுத்தலில் உள்ளது.”
இதற்கமைய, குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, தேர்தலுக்குத் தேவையான சட்டப் பின்னணியை விரைவில் பூர்த்தி செய்து தருமாறு ஆணையகம் எதிர்பார்ப்பதாகவும் ரசிக பீரிஸ் மேலும் வலியுறுத்தினார்.



