நேற்று பன்னலையில் இடம்பெற்ற வாகன மறிப்பு சம்பவம் – வாகனத்தில் இருந்து போதைப்பொருள் மற்றும் 924,770 ரூபாய் பணம் என்பன மீட்பு – 39 மற்றும் 16 வயதுடைய இரு பெண்களும் ஆணும் கைது

குருநாகல் – பன்னலையில் இடம்பெற்ற பரபரப்பான வாகனம் மறிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதன்போது நபர் ஒருவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணம் மற்றும் போதைப்பொருள் பொதியிடும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, மோட்டார் கார் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, செப்டம்பர் 22 ஆம் திகதி கிரிஉல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிரிஉல்ல நகரிலிருந்து குறித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் குழுவினர், பன்னலை பகுதியில் வைத்து அதனை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இருப்பினும், காரில் இருந்தவர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி, உத்தியோகத்தர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, பொலிஸார் வாகனத்தின் பின் சக்கரத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் கதவுகளைத் திறக்க மறுத்ததால், பொலிஸார் முன் இடதுபக்கக் கதவின் கண்ணாடியை உடைத்து, அவர்களை வெளியேற்றி சோதனையிட்டனர்.
காரைச் சோதனையிட்டதில் 15.260 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 924,770 ரூபாய் பணம் என்பன கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய ஆண் ஒருவரும், 39 மற்றும் 16 வயதுடைய இரு பெண்களும் வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெலும்தெனிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை புலனாய்வாளர்கள் பின்னர் சோதனையிட்டனர்.
அந்த சோதனையின் போது, மேலும் 62 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.68 மில்லியன் ரூபாய் பணம், போதைப்பொருள் பொதியிடலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 500 போத்தல் மூடிகள், ஒரு ரோல் வெளிப்படையான குழாய் மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக நம்பப்படும் 2,235 பிளாஸ்டிக் குழாய்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், பணம் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



