News

காத்தான்குடி நகர சபை அமர்வுகளில் ஜனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் –  உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு


✍🏻 Kky Reporter

காத்தான்குடி நகர சபையின் 16ஆவது சபை அமர்வு, நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காத்தான்குடி நகர சபை அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராகவும், சபை நடவடிக்கைகளில் ஜனநாயகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், ஏனைய 11 உள்ளூராட்சி மன்றங்களின் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளிப்படையாக இடம்பெற்று வருவதாக கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஊடகவியலாளர்களுக்கு சபை அமர்வுகளில் அனுமதி வழங்கப்படாமல், சபை நடவடிக்கைகள் மூடிய அறைக்குள் இடம்பெறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், சபை அமர்வுகளின்போது உறுப்பினர்களுக்கு உரிய முறையில் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை, சபையின் முறையான அனுமதியின்றி சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் அபிவிருத்திப் பணிகளைத் தடுத்து வருவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படும் விடயம் உள்ளிட்ட மேலும் சபை அமர்வுகளுக்கான அழைப்பிதழ்கள் தாமதமாகி வழங்கப்படுதல் என பல்வேறு சபை நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையும் முறையான ஜனநாயக நடைமுறையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும், காத்தான்குடி நகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, சபை நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியிலும் வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காத்தான்குடி நகர சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சபையாக அமைந்துள்ளதுடன், அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தவிசாளராகப் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பட்டி அணிந்து மேற்கொள்ளப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பிரதான நோக்கம், நகர சபை அமர்வுகள் உள்ளிட்ட அனைத்து சபை நடவடிக்கைகளிலும் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, உறுப்பினர்களின் கருத்துரிமை மற்றும் ஊடகங்களுக்கான அணுகல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button