அனுஜனுக்கு அரச மன்னிப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனையை வழங்குமாறு கோரி, இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் எம்.பி களும் இணைந்து சவுதி அரசிடம் மேல்முறையீடு செய்தனர்

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் பெருந்தொகை அபராதத்தையும் எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனுஜனுக்கு அரச மன்னிப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனையை வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சவூதி அரேபிய மன்னர் سلمان பின் அப்துல்அஸீஸ் அல் சவூதிடம் மேன்முறையீடு செய்துள்ளனர்.
பிரதியாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் 2026 செப்டம்பர் 21 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், அனுஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைத்தல், நிவாரணம் அளித்தல் அல்லது விதிக்கப்பட்ட நிதி அபராதத்தை ரத்து செய்தல் ஆகியவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட ஒரு தொழிலாளியான அனுஜனின் வருமானத்திலேயே இலங்கையிலுள்ள அவரது குடும்பம் பெரிதும் தங்கியுள்ளதால், இந்த அபராதத் தொகை அவரது நிதித் திறனுக்கு அப்பாற்பட்டது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தான் தண்டனை பெற்ற சம்பவத்திற்குப் பிறகு அனுஜான் தனது வருத்தத்தையும் மனப்பூர்வமான மன்னிப்பையும் தெரிவித்துள்ளதாகவும், நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்குத் தனது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அந்த மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்குத் தங்களது முழுமையான மரியாதையை வெளிப்படுத்தும் அதேவேளையில், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தைச் சுட்டிக்காட்டி, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே இந்த மேன்முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.



