News

சிறைத்தண்டனையை அமல்படுத்தாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் உத்தரவு!

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமல்படுத்தாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால், வரும் அக்டோபர் 01 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொதுபலா சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று (24) உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிராளியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஞானசார தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டுகையில், நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்த மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவடையும் வரை இந்தச் சிறைத்தண்டனையை அமல்படுத்துவதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், முன்வைக்கப்பட்டக் கருத்துக்களைப் பரிசீலித்த மேலதிக நீதிவான், எதிராளி நீதிமன்றத்தில் ஆஜரான பின்னரே தொடர்புடைய காரணங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, சிறைத்தண்டனையை அமல்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் ஏதேனும் இருந்தால், வரும் 01 ஆம் திகதி அவற்றைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, தண்டனைச் சட்டக்கோவையின் 291 வது பிரிவின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2025 ஜனவரி 09 ஆம் திகதி தீர்ப்பளித்த நீதிவான் நீதிமன்றம், ஞானசார தேரருக்கு இந்தச் சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டிருந்தது.

Recent Articles

Back to top button