21 மில்லியன் ரூபாய் நம்பிக்கை மோசடி செய்த வழக்கில் இருந்து கம்மன்பில விடுதலை..
ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை தவறாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாய் நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை அந்த வழக்கில் இருந்து விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர்களால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.
அதன்படி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவை குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆஸ்திரேலிய தொழிலதிபரான பிரையன் ஷாட்விக் என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரப் பத்திரத்தைப் (Attorney License) பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சட்டமா அதிபரால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



