முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு இன்று(30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அவர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இறுதியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உத்தரவிட்டிருந்தார்.



