சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. இலங்கை அரசிடம் கடும் கேள்விகளை எழுப்பியது..
தேசிய உளவுத்துறை மற்றும் இராணுவ உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னிச்சையாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை, அவருக்கு எதிராகச் சொல்லப்படும் கொடூரமான சித்திரவதைகள் மற்றும் அவரது தீவிர சுகாதார நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் குழுக்கள் பல இணைந்து இலங்கை அரசாங்கத்திற்குத் தமது கடும் கவலையைத் தெரிவித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சிறப்பு நிருபர், தன்னிச்சையான தடுப்புக் காவல் குறித்த பணிக்குழு, சுகாதார உரிமைகள் தொடர்பான சிறப்பு நிருபர் மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரம் தொடர்பான சிறப்பு நிருபர் ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், 2026 பிப்ரவரி 25 அன்று கடமைக்குச் சென்று கொண்டிருந்தபோது குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், பின்னர் அது மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய முன் கூட்டிய தகவல்கள் தெரிந்திருந்தும் அதை வேண்டுமென்றே மறைத்தல், சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகியவை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.
இருப்பினும், கைது செய்யப்பட்டு 103 நாட்களுக்கும் மேலாகியும் அவரிடம் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு குறுகிய கால இடைவெளிகளில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், அவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும் அவர் எந்த வழக்கின் கீழ் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது.
மேலும், சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளை நடத்தும் இரண்டு முக்கிய அதிகாரிகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் என்றும், தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகவே இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாக தீவிர சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே 6.5 x 4.4 அடி அளவிலான மிகவும் சிறிய சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அறை எலிகளால் நிறைந்திருந்ததாகவும், இரவும் பகலும் எரியும் விளக்குகள் காரணமாக அவர் தீவிர தூக்கமின்மை நோய் மற்றும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, அதிகாரிகள் குழு ஒன்று சிறை அறைக்குள் நுழைந்து, மற்ற கைதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் அவரது ஆடைகளை முழுமையாகக் கழற்றி, விலங்கிட்டு, வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயன்று மிகவும் அவமரியாதையாக நடத்தியதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக அவரது மனைவியால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் மையத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை திருத்த அல்லது அழிக்க CID நிலையப் பொறுப்பதிகாரி முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், சலே மன உளைச்சலால் (PTSD) பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், அவர் சித்திரவதை மற்றும் கொடூரமான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் உள்ளன என்பதும் சட்ட மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் அவரைச் சந்திப்பதைத் தடுத்தமை தொடர்பாக கோட்டை Magistrate நீதிமன்ற நீதிபதி CID பணிப்பாளருக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அந்த Magistrate நீதிபதியும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலவும் அநீதியான சூழ்நிலைகளுக்கு எதிராக ஜூன் 6 அன்று அவர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை வேகமாகச் சீர்குலைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி காரணமாக அவர் தேசிய வைத்தியசாலையின் இதய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (CCU) மாற்றப்பட்டதுடன், அவர் அதிக ஆபத்துள்ள இதய நோயாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற இதய அறுவை சிகிச்சை மற்றும் சாதனம் பொருத்துதல் (cardiac implant) அவசியமாகலாம் என்றும், அவரது தற்போதைய நிலை மேலும் தடுப்புக் காவலில் வைப்பதற்குப் பொருத்தமற்றது என்றும் இதய நோய் நிபுணர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மருத்துவமனை மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க CID தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் சலே மீண்டும் CID வசம் ஒப்படைக்கப்பட்டால், அவர் மேலும் பழிவாங்கப்படுவதற்கும் சித்திரவதைக்குள்ளாகவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டும் ஐ.நா பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை (CAT) ஆகியவற்றை மீறியுள்ளதா என்பது குறித்து தீவிர சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக தெளிவுபடுத்தி 60 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டு,8 முக்கிய விடயங்களின் கீழ் அரசாங்கத்திடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
1. தொடர்புகள் ஏதுமின்றி தனிமைப்படுத்தி வைப்பதற்கு (incommunicado detention) காரணமான விடயங்கள்.
2. அவரது தற்போதைய சுகாதார நிலைமை, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவா என்பது பற்றிய விவரம்.
3. கொடூரமான சித்திரவதைகள் புரிந்தமை மற்றும் அவமரியாதைக்குட்படுத்தியமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.
4. சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான மற்றும் நடுநிலையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரம்.
5. குற்றப் புலனாய்வுத் துறை (C.I.D.) அதிகாரிகளிடமிருந்து வரக்கூடிய பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பது பற்றிய விவரம்.
இந்த அறிவித்தலும், அதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் பதிலளிப்பும் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், சலே அவர்களின் உயிருக்கு அல்லது உடல் மற்றும் மன ரீதியான நல்வாழ்வுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்கு உடனடியாக இடைக்கால நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அரசாங்கத்திடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும் அவர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.



