News

யானை – மனித மோதலின் காரணமாகவே ‘காவந்திஸ்ஸ’ யானைக்கு இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது – சஜித் கவலை

இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வுகளை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



யானைகள் வாழ்வதற்குத் தேவையான காடுகளையும், பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



நாட்டின் பிரபலமான தந்தங்களைக் கொண்ட ஆண் யானையான ‘காவந்திஸ்ஸ’ யானை தற்போது எதிர்கொண்டுள்ள நிலை, யானை – மனித மோதலின் ஒரு வெளிப்பாடாகும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்களின் நலனுடன் யானைகளையும் அழிந்துவரும் தந்தங்களைக் கொண்ட ஆண் யானைச் சந்ததியையும் பாதுகாப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


தந்தங்களைக் கொண்ட ஆண் யானைகளின் எண்ணிக்கை பல தசாப்தங்களாகக் குறைந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதற்கென யானைகள் பாதுகாப்புச் செயலணியொன்றை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



‘காவந்திஸ்ஸ’ யானையைக் காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டிய அவர், யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் முக்கியமான பணிகளை ஆற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.



எனினும், சிகிச்சை நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், யானை–மனித மோதலைக் குறைப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



இலங்கையின் மிகப்பெரிய மற்றும் உயரமான யானைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘காவந்திஸ்ஸ’ யானை, இன்று (16) காலை சியம்பலாங்கமுவ, யாய 03 பகுதியில் உள்ள நெல் வயலொன்றில் கீழே விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.



பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இந்த யானையின் நிலைமை குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பகுதிக்குச் சென்று யானையின் நிலைமையை நேரில் பார்வையிட்டார்.



மஹவ, கல்கமுவ, ஹெட்டதிவுல்வெவ ஆகிய பகுதிகளின் காட்டுப்பகுதிகளிலும் அவற்றை அண்மித்த இடங்களிலும் வாழ்ந்து வரும் இந்த யானையின் உடல்நிலை தொடர்பாகக் கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் எழுந்திருந்தன.



யானையின் வலது முழங்காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு கடந்த 24ஆம் திகதி பிற்பகல் முதல் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.



இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் கவனம் செலுத்தியிருந்தார்.



காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், வேறு நோய் நிலைமை காரணமாகவே ‘காவந்திஸ்ஸ’ யானை வயலில் விழுந்திருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைக்கான மேலதிக சிகிச்சைகள் தொடர்பிலும் சஜித் பிரேமதாச கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button