நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பொருளாதாரத்திற்கு 400 கோடி ரூபாய் நஷ்டம்…
17 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் 400 கோடி ரூபாவையும் தாண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அழிவுக்கான உண்மையான பொறுப்பாளிகள் யார் என்பதைக் கண்டறிய உடனடியாக சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றார்.
தனது சமூக வலைத்தள கணக்கு ஊடாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பு முழுமையாக செயலிழந்தமையினால் ஏழு மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் நாடு முழுவதும் இருளில் மூழ்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த மின் தடையின் காரணமாக மின்சார நிறுவனங்களுக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள நேரடி நிதி நஷ்டம் 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். எவ்வாறாயினும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்சாரத் துறை வழங்கும் 15 வீதம் முதல் 20 வீதம் வரையிலான பங்களிப்பைக் கருத்திற்கொள்ளும்போது, நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மறைமுக நஷ்டம் அதனைப் போன்று பத்து மடங்காகும், அதாவது 400 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என முன்னாள் அமைச்சர் கணக்கிட்டுள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள் அல்லது திடீர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மின் விநியோகத்தில் தடைகள் ஏற்படலாமாயினும், நாடு முழுவதும் மின்சாரம் தடைபடும் முழுமையான அமைப்பு முடங்குதலைத் தவிர்ப்பதற்காக 2019 ஆம் ஆண்டு முதல் அதிக செலவுகளை மேற்கொண்டு அமைப்பு ஒழுங்குபடுத்தல் நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டு பேணப்பட்டு வருவதாக அவர் நினைவுபடுத்துகிறார். இத்தகைய பின்னணியில் இவ்வாறானதொரு மின் தடை ஏற்பட்டுள்ளமை பாரிய கேள்விக்குறியை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டும் அவர், புத்தளம் லக்விஜய மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த நிலைமைக்குக் காரணம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மூலம் தெரியவருவதாகவும் குறிப்பிடுகிறார்.
இதற்கு முன்னர் 2025 பெப்ரவரி 09 ஆம் திகதியும் இவ்வாறானதொரு பாரிய மின் தடை பதிவாகியிருந்த போதிலும், அது தொடர்பில் எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சுதந்திரமான விசாரணையும் நடத்தப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் குற்றம் சுமத்துகிறார்.
ஒவ்வொரு பிரஜைக்கும் சட்டம் ஒரே சீராக நடைமுறைப்படுத்தப்படுமாயின், முழு நாட்டின் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த இந்த நெருக்கடிக்கு யார் பொறுப்பு என்பதை உடனடியாக வெளிப்படுத்தி அவர்களுக்குத் தண்டனை வழங்குவது அரசாட்சியின் முதன்மையான பொறுப்பாகும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், இந்த மின் தடைகளை அடிப்படையாகக் கொண்டு, அதனை மறைமுகமாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி மின் உற்பத்தி வீழ்ச்சியடையச் செய்வதற்கான சதிமுயற்சி ஏதேனும் அரசாங்க தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்கள் கடுமையாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேலும் எச்சரித்துள்ளார்.



