பௌத்த துறவிகளைச் சிறைப்படுத்துதல் மற்றும் விடுவிப்பதன் போது காவி (உடைகளை) அகற்றுவது தொடர்பான சட்டங்களைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
சில பௌத்த துறவிகள் ஒருவர் கைதியாகச் சிறைப்படுத்தப்படும் பொழுதோ அல்லது சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பொழுதோ காவியை அகற்றுவது மற்றும் ஆடைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முறைகள் குறித்த அறிவுறுத்தல்களை உள்ளடக்கி, சிறைச்சாலை திணைக்களத்தின் நிலையான கட்டளைகள் திருத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி நிலை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ஆர். பிரசாத் ஹேமந்த குமாரவினால், நீதி மற்றும் தேசிய ஒருகூட்டுறவு அமைச்சரின் ஒப்புதலுடன், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறைப்படுத்தப்படும் போது அவர் அதுவரை அணிந்திருந்த காவியை அகற்றுவது தொடர்பாக பௌத்த சாசன அலுவல்கள் திணைக்கடத்திடம் வினவப்பட வேண்டும்.
அதன் பின்னர், பௌத்த சாசன அலுவல்கள் திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நிகாய அல்லது தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டு, 10 நாட்களுக்குள் அந்த நிகாயவினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
குறித்த காலப்பகுதிக்குள் எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால், சிறைச்சாலை ஆணையாளருக்கு உரிய விதிகளுக்கு இணங்க செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பௌத்த துறவி ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் (விடுதலை செய்யும் போது/நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் போது), அவர் சிறைச்சாலைக்குச் செல்லும் போது அணிந்திருந்த சீவரங்களை அவ்வாறே அணிந்திருப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிகாயவினால் அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை எனில் அது தொடர்பிலும் உரிய விதிகளுக்கு இணங்க செயற்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு மதங்களின் குருமார்களைச் சிறைப்படுத்தும் போதும் மற்றும் வெளியேற்றும் போதும் இந்த விதிகள் அவசியமான மாற்றங்களுடன் பொருந்தும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


