News

சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை –  எரிசக்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.



ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்ட தரப்பினராக அவரைப் பெயரிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பல சாட்சியாளர்கள் முன்வைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



மேலும், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மைத்திரி குணரத்னவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயரைக் குறிப்பிட்டு பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளார்.



அமைச்சின் முன்னாள் செயலாளர் படகொட தொடர்பான தகவல்களும் விசாரணைகளின்போது வெளியாகியுள்ளன.



மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நல்லாட்சி அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் எரிசக்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது, நிலக்கரி கொள்வனவின்போது அமைச்சரவையின் அனுமதியின்றிச் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக சாட்சியாளர் ஒருவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



2025ஆம் ஆண்டுக்கான நீண்டகால நிலக்கரி கொள்வனவின்போது தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.



உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்பட்டு வருகிறது.



இதுவரை சுமார் 20 பேர் அழைப்பாணை விடுக்கப்பட்ட தரப்பினர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button