News

நேற்று சத்சர நிமேஷ்; இன்று இஷார ஹர்ஷ குமார; நாளை???
தொடரும் பொலிஸ் அராஜகம்; முடிவுக்கு வருவது எப்போது?



பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிம் கேள்வி எழுப்புகிறது சமூக நீதிக் கட்சி.

ஹோமாகம பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதான இஷார ஹர்ஷ குமாரவின் மரணத்தை சமூக நீதிச் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷார, உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் பொலிஸ் காவலில் இருந்தபோது ரத்தப் போக்குடனும், காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத நிலையிலும் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். உடலெங்கும் வெளிப்படையாகக் காயங்கள் இருக்கும்போது, அவரது மரணத்திற்கு “திடீர் உடல்நலக்குறைவு” தான் காரணம் என பொலிஸார் கூறுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. இந்தச் சம்பவத்தில் உடனடி, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இஷாரவின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் மறைக்கப்படவோ, அலட்சியப்படுத்தப்படவோ கூடாது. இதற்குக் காரணமான அனைவரும் எவ்வித விதிவிலக்குமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே இந்த அடிப்படையில் சமூக நீதிச் கட்சி பின்வருவனவற்றை வலியுறுத்துகிறது:

1. இஷாரவின் கைது மற்றும் விசாரணையில் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாகப் பணிநிறுத்தம் செய்ய வேண்டும். அத்துடன், குற்றப் பொறுப்பிற்கு ஆதாரங்கள் உள்ள அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

2. சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், உண்மையை வெளிக்கொண்டுவரவும் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் நடுநிலையான, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. இஷாரவின் குடும்பத்தினருக்கும், சாட்சியமளிக்க முன்வரும் சாட்சிகளுக்கும் எவ்வித அச்சுறுத்தலோ பழிவாங்கும் நடவடிக்கையோ ஏற்படாதவாறு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

4. காவல் நிலையங்களுக்குள், குறிப்பாகத் தடுப்புக் காவல் அறைகளில் முறையான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பதிவுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் இத்தகைய வன்கொடுமைகள் நடப்பதைத் தடுக்கும்.

பொலிஸ் காவலில் சித்திரவதை செய்வது சட்ட அமுலாக்கம் ஆகாது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருக்கும் எவரும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒருவரின் உயிரைப் பறிக்க அனுமதிக்க முடியாது.

பொலிஸ் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியாது என்ற பயம் மக்களிடையே ஏற்படுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த பெரும் அடியாகும். குடிமக்களின் பாதுகாப்பு என்பது பொலிஸ் நிலைய நுழைவாயிலோடு முடிந்துவிடுவதில்லை; மாறாக, ஒருவரைத் தன் காவலில் எடுக்கும்போது அரசுக்கான பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது.

இஷார ஹர்ஷ குமார மற்றும் சத்சர நிமேஷ் உட்பட பொலிஸ் காவலில் உயிரிழந்த அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் எந்தவொரு குடிமகனும் இதுபோன்ற துயரத்தைச் சந்திக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

சமூக நீதிச் கட்சி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பக்கம் உறுதியாக நிற்கிறது. இஷாரவுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவும், பொலிஸ் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button