News

நான் வராமல் ஒரு சட்டத்தரணி ஆஜரானால் போதாதா? அல்லது வீடியோ மூலம் சாட்சியமளிக்கவா? பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்திடம் கேள்வி

மாத்தறை, எளியகந்த பகுதியில் ‘பிரவுன்ஸ் ஹில்’ காணியை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரில் ஆஜராகாமல் அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜராக அனுமதிக்குமாறு கோரிய மனுவை மாத்தறை நீதிவான் சதுர திசாநாயக்க நிராகரித்துள்ளார்.


அந்தக் கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் போதுமானதாக இல்லை என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்த நீதிவான், சந்தேகநபரான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையையும் பிறப்பித்துள்ளார்.


தான் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதால் நீண்ட விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் காரணமாக, காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.


இருப்பினும், பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான அரசு சிரேஷ்ட சட்டத்தரணி களண கொதலாவல இந்தக் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சந்தேகநபர் இவ்வாறானதொரு நிவாரணத்தைப் பெறுவதற்கு விசேடமான சூழ்நிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்த எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என அரசுச் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிவான், பசில் ராஜபக்ஷவின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தார்.


மாத்தறை ‘பிரவுன்ஸ் ஹில்’ பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியைக் கொள்வனவு செய்வதற்கான பணம் திரட்டப்பட்ட விதத்தை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமம் அயோமா கலப்பத்தி என்பவரின் பெயரில் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களான முதித்த ஜயகொடி மற்றும் திஸ்ஸ கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதிலும், பசில் ராஜபக்ஷ மற்றும் அயோமா கலப்பத்தி ஆகிய இருவரும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
தகவல்களின்படி பசில் ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதுடன், அயோமா கலப்பத்தி கனடாவில் வசித்து வருகிறார்.

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஊடாக அழைப்பாணை அனுப்பவும் நீதிவான் உத்தரவிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button