News

சுகாதார அமைச்சின் செயற்பாடு கவலையளிக்கின்றது!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உதவித் தாதியர்கள் ஹிஜாப் அணிவதற்கு வைத்தியசாலை நிர்வாகம், குறிப்பாக வைத்திய அத்தியட்சகர் தடை விதித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் சட்டத்தரணிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது.

இதன்போது, குறித்த வைத்தியசாலை நிர்வாகமும் வைத்திய அத்தியட்சகரும் பெண் உதவித் தாதியர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் ஹிஜாப் அணிவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதையும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க இம்மாதம் 10ஆம் திகதி வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வைத்திய அத்தியட்சகருக்கு சுகாதார அமைச்சு புதியதொரு பதவியை வழங்கி, அவரைப் பாராட்டும் வகையில் செயற்பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருக்கும் இச்சூழலில், சுகாதார அமைச்சின் இத்தகைய நடவடிக்கை சமூகத்தின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னரும், குறித்த பெண் உதவித் தாதியர்கள் தங்களது மத உரிமையின்படி ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கான அனுமதி இதுவரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுதான்.

இவ்வாறான நிலையில், குறித்த வைத்திய அத்தியட்சகருக்கு புதிய பதவி வழங்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்வி எழுகின்றது.

அதேவேளை, தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வுகளில்கூட இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சிடம் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் மேலும் கவலையளிக்கும் விடயமாகும்.

“கல்முனை இளைஞர் பேரவை”

Recent Articles

Back to top button