சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தின்படிஅநுரவின் குடும்ப வருமானம் ஜனாதிபதியின் சம்பளம் மட்டுமே –

நவம்பர் 8, 2026
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்திற்கு அமைய, ஜனாதிபதியின் ஒரே வருமான ஆதாரம் ஜனாதிபதிச் சம்பளம் மட்டுமே ஆகும். அதிலிருந்து கிடைக்கும் வருடாந்திர வருமானம் அனைத்துக் கொடுப்பனவுகளுடனும் சேர்த்து 3,081,624 ரூபாவாகும்.
ஜனாதிபதியின் மனைவியோ அல்லது மகனோ இந்தக் காலப்பகுதிக்கு அமைய எந்தவொரு வருமானத்தையும் ஈட்டவில்லை என அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனம் வழங்கப்பட்ட வேளையில் ஜனாதிபதியின் மகனின் கையில் உள்ள பணம் ரூ. 5,000 எனவும் அவரது வங்கிக் கணக்கில் இருப்பது ரூ. 2,500 எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ. 321,888 மீதி இருப்பதாகவும், கையில் இருந்த பணம் ரூ. 35,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிரகடனத்திற்கு அமைய ஜனாதிபதிவசம் இருந்த 2017 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட ரூ. 15 மில்லியன் பெறுமதியான டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் புதிய சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிராதது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்திற்கு அமைய, 2025 ஆம் ஆண்டில் அவரிடம் இருந்த 29.6 மில்லியன் நிதிச் சொத்துக்கள் ரூ. 23.5 மில்லியனாகக் குறைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் 18 தனிப்பட்ட கடன்களைப் பெற்றுள்ளதுடன், அவற்றில் 17 கடன்களை லக்ஷ்மன் டி சொன்சேகா என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
இவ்வாறு பெறப்பட்ட கடன் தொகைகளின் மொத்தக் கூட்டுத்தொகை ரூ. 825 லட்சத்திற்கும் அதிகமாகும். மேலும் ஒரு கடன் தொகையை ஹேமந்த ஜயகொடி என்ற நபரிடம் இருந்து பெற்றுள்ளார். அவரிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை ரூ. 84 லட்சமாகும்.
இந்த விடயங்கள் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்திற்கு அமைய, ஜனாதிபதி உள்ளிட்ட சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டிய நபர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்கள் பொதுமக்களின் அறிவிற்காக தற்போது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சதுர பமுனுவ



