மத்திய கிழக்கு (ஈரான் – அமெரிக்கா சம்பந்தப்பட்ட) பதட்ட நிலைகள் தணிந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை இந்த வாரத்தில் சுமார் 17% வீழ்ச்சியடைந்தது…

ஈரான் சம்பந்தப்பட்ட மோதல்கள் தணியக்கூடும் என்றும், மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் மீட்சியடையும் என்றும் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடுமையான வாராந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
சர்வதேச சந்தையில் பிரென்ட் (Brent) கச்சா எண்ணெய் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பீப்பாய் ஒன்று 98.32 அமெரிக்க டொலர்களாக நிலவியதுடன், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 90.83 அமெரிக்க டொலர்களாகப் பதிவானது.
ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் இந்த வாரத்தில் சுமார் 17% வீழ்ச்சியடைந்தது. இது கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய ஆகப்பெரிய வாராந்த சதவீத வீழ்ச்சியாகும். அதேவேளை, WTI கச்சா எண்ணெய் சுமார் 13% சரிவைக் கண்டது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி காங்கிரஸ் சபையின் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. இது ஈரானுடனான மோதலுக்கு வாஷிங்டன் ராஜதந்திர தீர்வைக் காணக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எண்ணெய் விலைகள் புதன்கிழமை மட்டுமே 8%-க்கும் அதிகமாகச் சரிந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலான குறைந்தபட்ச அளவை எட்டின. இருப்பினும், வாரத்தின் பிற்பகுதியில் சிறிதளவு மீட்சியடைந்தன.
இதனிடையே, உலகளாவிய எண்ணெய் விநியோகம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளும், தேவை குறைந்து வருவதற்கான சான்றுகளும் விலைகளின் கீழ்நோக்கிய அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதி மீட்சியடைவதாலும், அதிக ஆற்றல் செலவுகள் உலகளாவிய நுகர்வைக் குறைப்பதாலும் சந்தையில் உபரி விநியோகம் உருவாகி வருவதாக பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் (டேங்கர்கள்) மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், விநியோகத் தடங்கல்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதால், மேலதிக விலை வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, சர்வதேச எண்ணெய் விலைகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், உள்நாட்டு எரிபொருள் விலைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்கவும் உதவக்கூடும்.



