2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்! ஒரு குறுக்குவெட்டுப் பார்வை!!

✍🏻 Dilshan Mohamed
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் மொத்த வருமானம் 6.18 ட்ரில்லியன் ரூபாய்.
மொத்தச் செலவு: 7.933 ட்ரில்லியன் ரூபாய்.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை( Deficit): 1.75 ட்ரில்லியன் ரூபாய்.
1. மூலதனச் செலவினங்களுக்காக 2 ட்ரில்லியன் ரூபாய்!
மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதனச் செலவினங்களுக்காக 2 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூலதனச் செலவினங்களை 2 ட்ரில்லியன் ரூபாய் என்ற இலக்கை நோக்கி நகருவதாக கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி அறிவித்திருந்தார். வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது இது 43 % அதிகரிப்பாகும்.
எனினும், இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, இலங்கையின் அரச இயந்திரத்திற்குள் (State Machinery) காணப்படும் கொள்வனவு நடைமுறைகளில் (Procurement Procedures) நிலவும் நீண்டகாலத் தாமதங்கள், இத்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்குப் பெரும் தடையாக அமையும்.
எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவினங்களில் 77% , 2026 ஆண்டு ஒதுக்கீடுகளில் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 60 % நடைமுறைப்படுத்தியிருப்பதை அரசாங்கம் தனது சாதகமாக கருதுகிறது.
2027 ஆம் ஆண்டுக்கான இந்த 2 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 75% ஐ நடைமுறைப்படுத்த முடிந்தால் கூட அதுவொரு இமாலய வெற்றியாகும்.
2. கடன்களுக்கான வட்டி
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கான வட்டியை மாத்திரம் செலுத்துவதற்காக 2.643 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 30 வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவே அதிகளவிலான கடன்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் . ஆனாலும், யுத்தம் முடிவடைந்த போது (2010) நாட்டின் மொத்த அரச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 69% காணப்பட்டது.
அதன்பின்னர் இந்தக் கடன் சுமை படிப்படியாக அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டில் 74% ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 96% ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 100 சதவீதமாகவும் உயர்ந்தது.
இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு வருடத்தில் நாட்டின் மொத்த வருமானமும், கடனாக பெறப்பட்டிருக்கிறது.
இந்தக் கடன் விகிதம் 2024 ஆம் ஆண்டில் 95% ஆக குறைந்து, தற்போது 91% ஐ அண்மித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், அபிவிருத்திக்காக ஒதுக்கவேண்டிய பெருமளவு நிதி அதாவது GFP இல் சுமார் 5%, கடன்களுக்கான வட்டியை செலுத்துகைக்காக மாத்திரம் ஒதுக்க வேண்டியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
3. மக்கள் நலத்திட்டங்கள்
அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்காக 1.48 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
இதேபோன்று, அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக 1.41 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவுகள் இனிவரும் வருடங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
4. அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரையில், பல தசாப்தங்களாக அதிக நிதியைப் பெற்றுவந்த பாதுகாப்பு அமைச்சு இம்முறை ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க மாற்றமாகும்.
நிதி மற்றும் பொருளாதார அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு போன்ற துறைகள் பாதுகாப்பு அமைச்சை விட அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளன.
அதேபோன்று, கல்வி அமைச்சு பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பதும் வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
இது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இதை பார்க்கலாம்.
5. அரசாங்கத்தின் முன்னால் உள்ள முக்கிய சவால்!
அரசாங்கம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகப் பணவீக்கம் காணப்படுகிறது.
கடந்த வருடம் 5% காணப்பட்ட பணவீக்கம் தற்போது 8.5% ஐ எட்டியிருக்கிறது. இதனால் அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்குப் போர் உள்ளிட்ட சர்வதேசக் காரணிகள் இதற்குப் பின்னணியாக கூறினாலும், சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுதான் முதன்மையான பிரச்சினை.
பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேசச் சூழல், நிதி ஒழுங்கு என எத்தனை காரணங்களை முன்வைத்தாலும், மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முதல் தெரிவு வயிறுதான் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
6. முதன்மைக் கணக்கில் உபரி (Primary Balance Surplus)
திறைசேரியின் முதன்மைக் கணக்கில் (Primary Balance) தொடர்ச்சியாக 1.8 ட்ரில்லியன் ரூபாய் உபரி (Surplus) நிலவுவதும், ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்கில் (Overall Budget Balance) 22 பில்லியன் ரூபாய் உபரியாக (Surplus) மாறியிருப்பதும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணத்தில் முக்கியமான சாதகமான அம்சங்களாகும்.
இது முதலீட்டாளர்களுக்குரிய நம்பிக்கையையும் , மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளாமல் திட்டங்களை நடைமுறைபடுத்தவும், பங்கு சந்தையின் ஸ்திரத்தன்மையும் பேணுவதற்கு உதவும்.
இறுதியாக, இந்த வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான வெற்றி அதன் புள்ளிவிபரங்களில் மாத்திரமல்ல; ஒதுக்கப்பட்ட நிதி எந்தளவுக்கு வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுகிறது, அது மக்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.



