எமது தயாரிப்புகள் மாசுபட்டவை என்றோ, நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றோ, சுகாதாரத்திற்குக் கேடானவை என்றோ ஆய்வுகூட அறிக்கைகள் குறிப்பிடவில்லை – 28 குற்றச்சாட்டுகளின் கீழ் 84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பில் Bing Chun விளக்கம்

நிர்ணயிக்கப்பட்ட உணவுத் தரத்திற்கு அமையாத ஐஸ்கிரீம் விற்பனை உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளின் கீழ், 84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நீதிமன்ற வழக்குத் தொடர்பான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தி Bing Chun Sri Lanka நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 28 குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
.
சோதனைகளின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பு மாநகர சபையின் ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டதில், குறித்த ஐஸ்கிரீம் வகைகள் உரிய தரத்திற்கு அமையவில்லை என்பது கண்டறியப்பட்டது.
.
ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளித்துள்ள Bing Chun Sri Lanka நிறுவனம், வெண்ணிலா மற்றும் சொக்லேட் ஐஸ்கிரீம் என விற்பனை செய்யப்பட்ட இரண்டு தயாரிப்புகளின் கொழுப்புச் சத்து மற்றும் மொத்தத் திடப்பொருட்களின் அளவு தொடர்பிலேயே இந்த ஆய்வு முடிவுகள் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
.
குறித்த தயாரிப்புகள் மாசுபட்டவை என்றோ, நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றோ, சுகாதாரத்திற்குக் கேடானவை என்றோ அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என்றோ ஆய்வுகூட அறிக்கைகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்பதை அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
.
“ஒரு தயாரிப்பு நிர்ணயிக்கப்பட்ட உள்ளடக்கத் தரங்களுக்கு அமைந்துள்ளதா என்பதற்கும், அந்தத் தயாரிப்பு பாதுகாப்பற்றது அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது என்று தீர்மானிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியமாகும்,” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
.
இலங்கையின் உணவு ஒழுங்குவிதிகளுக்கு அமையச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள Bing Chun நிறுவனம், நீதித்துறைச் செயன்முறைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் தாம் மதிப்பளிப்பதாகக் கூறியுள்ளது.
.
பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு அமைவதை உறுதிப்படுத்துவதற்காக, தயாரிப்புகளின் சூத்திரங்கள், தர விவரக்குறிப்புகள் மற்றும் விளக்கங்களை மீளாய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
.
மேலும், உரிய பரிசோதனை நடைமுறைகள் ஊடாக மேலதிக தயாரிப்பு மதிப்பீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன், தமது செயற்பாடுகள் முழுவதும் உள்ளகக் கண்காணிப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
.
உள்ளடக்கத் தரங்களுக்கு அமையாமையை, ஒரு தயாரிப்பு மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கான நேரடி ஆதாரமாகக் கருதுவதைத் தவிர்க்குமாறு Bing Chun நிறுவனம் ஊடகங்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
.
தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய தவறான, திசைதிருப்பும் அல்லது அவதூறான கருத்துக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள கரிசனைகள் குறித்து Bing Chun Sri Lanka நிறுவனம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், உள்ளூர் விதிமுறைகளுக்கு அமையச் செயற்படுவதற்கும் நுகர்வோர் நம்பிக்கையைப் பேணுவதற்கும் தாம் மீண்டும் உறுதியளிப்பதாகத் தெரிவித்துள்ளது.



