காட்டுப் பகுதி மலைக்குகையில் 15 வயதுச் சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவத்தை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன் ; அமைச்சர் சரோஜா பால்ராஜ்

நக்கிள்ஸ் பகுதியில் பாதுகாப்பற்ற பிரசவத்தைத் தொடர்ந்து, புதிதாகப் பிறந்த குழந்தையுடன் 15 வயதுச் சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
.
நவம்பர் 14ஆம் திகதி வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில், ஒரு தாயாக இச்சம்பவம் தன்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குறித்த சிறுமியும் புதிதாகப் பிறந்த குழந்தையும் தற்போது பாதுகாப்பாக இருப்பது குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளார்.
.
இரு பிள்ளைகளினதும் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து அரசாங்கத் தலையீடுகளையும் முன்னெடுக்குமாறு உரிய திணைக்களங்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
.
நவீன சமூகத்தின் சிக்கல்களுக்கு மத்தியில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர பிணைப்பும் தொடர்பாடலும் படிப்படியாக இல்லாமல் போய்க்கொண்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.
பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டிய அவர்களது நெருங்கிய வட்டத்திற்குள்ளேயே, அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக மாறுவதற்கு இது காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.
குடும்பங்களுக்குள் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், எத்தகைய சூழ்நிலையிலும் தமது பெற்றோருடன் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு இருப்பதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
.
பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதும், வெளிப்படையான தொடர்பாடலை ஊக்குவிப்பதும் இவ்வாறான ஆபத்தான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்வதைக் கணிசமாகக் குறைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.
பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள நபர்களுடன் தொடர்புபடும் அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினர், மக்களால் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
.
பாதுகாப்பற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் சிக்கும் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2027ஆம் ஆண்டு முதல் புதிய ‘மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை’ (Alternative Care Policy) நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
.
பிள்ளைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்திய அவர், பிள்ளைகள் விடயத்தில் அனைத்துப் பிரஜைகளும் அதிக உணர்திறனுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.



