மாகாணசபை தேர்தல் இருக்கிறதா, இல்லையா? என்பதைச் சொல்லுங்கள் – முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள் ; காட்டமாக கேள்விக் கணைகளை தொடுத்தார் ரவூப் ஹக்கீம்

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டமாக கேள்விக் கணை
“மாகாணசபைத் தேர்தல் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்லுங்கள்.
அதற்காகப் பணம் ஒதுக்கிச் செய்வீர்களா, இல்லையா?
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் மாகாணசபைத் தேர்தல் குறித்து ஏதாவது ஒரு வசனமாவது இருந்ததா?”
இவ்வாறு, பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள்(14) விவாத்தில் கலந்துகொண்டுஉரையாற்றியபோது,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
.
வரவு செலவுத் திட்டவிவாதத்தில் உரையாற்றுகையில்,அவர் மேலும் தெரிவித்தவையாவன:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே,
பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் உரைக்குப் பின்னர் எனக்குப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். அவ்வாறே, இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, இப்போது ஒரு பரிணாம யுகத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் இங்கு குறிப்பிட்டார். அந்தப் பரிணாம யுகத்திற்குப் பாதையமைக்கும் வகையில், நேற்றைய தினம்(13) “இல் மாவீரர் தினம் தொடர்பிலான நிகழ்வுகள் நடைபெற்றதோடு, அங்கும் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
அந்த அமைப்புக்காக உயிர்நீத்த அதன் தலைவர்களுக்காக உரிய
கௌரவத்தை வழங்குவது வேறு கதை.
ஆனால், அவ்வாறு கூறுகின்ற அரசாங்கம், தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அவர்கள் இழந்த மாவீரர்
நினைவேந்தல்களுக்கு எவ்விதத்திலும் சமமான உரிமைகளை வழங்குவதில்லை. மாறாக, கடைகளை போய் உடைப்பதும், நினைவுச் சின்னங்களை அகற்றுவதும்தான் அங்கு செய்யப்படுகின்றன. அவர்களது(ஜேவீபி) தரப்புத் தியாகிகளுக்கும் வீரர்களுக்கும் கௌரவம் செய்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை ஆனால், அதற்குச் சமமாக மற்றவர்களுக்கும் உரிய உரிமைகளை வழங்க வேண்டும். இந்த அரசாங்கம் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பது இதன் மூலம் நன்றாகவே வெளிப்படுகிறது.
ஜனாதிபதி தனது உரையில் ஒரு சிறிய குறிப்பை கூறினார்; அதாவது, மார்ச் மாதம் வரும்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மீண்டும் ஒப்பந்தம் செய்வது தொடர்பில் மீளாய்வு செய்ய நமக்குத் தேவை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்க ஒரு குழுவை நியமிப்பதாக அவர் கூறினார்.
ஆனால், இப்போது உண்மைகள் வெளிவந்துவிட்டன. முதல் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர் அனில் ஜயந்த கூறியதாக “வீரகேசரி” பத்திரிகையில் இன்று(14) வெளிவந்த செய்தி ஒன்றில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தொடர்வது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, மிகப் பொருத்தமான நடவடிக்கையை எடுத்துத் தீர்மானிப்பதற்கு முன்பு நாட்டின் குறிப்பிட்ட தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும், நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அமைச்சரவை இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை இக்குழு ஆராயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்பிற்குத் தெரிந்த விடயமாகும். அவர் ஈரானுக்கு எதிரான போருக்குச் சென்றது மாத்திரமல்ல, மக்களின் ஜீவனோபாய சுமையும் அங்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இடைக்காலத் தேர்தலில் செனட் சபையும் காங்கிரஸும் இணைந்து அமெரிக்க ஜனநாயகம் மூலம் ட்ரம்பிற்குப் முகத்தில் அறைந்து போன்றுபாடம் புகட்டின. இந்த ஜனாதிபதி முறைமை என்பது அப்படித்தான். ஒவ்வொரு நாட்டிலும் அதுதான் நடக்கிறது. ஜனாதிபதிகள் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப் போய் தடைகளை எதிர்கொள்கிறார்கள்.
முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திப் காட்டுங்கள். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் மாகாணசபைத் தேர்தல் குறித்து ஏதாவது ஒரு வசனமாவது இருந்ததா? மாகாணசபைத் தேர்தல் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்லுங்கள்? அதற்காகப் பணம் ஒதுக்கிச் செய்வீர்களா இல்லையா?
பெலவத்தையின் அந்தத் தீர்மானம்தான் டில்வின் சில்வா அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது. அங்கு சென்று இந்தியாவின் பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது பற்றிக் கூட நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.
ஆனால், பிமல் ரத்நாயக்க அமைச்சுப் பொறுப்பில் இருந்தபோது காங்கேசந்துறைத் துறைமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் .நீங்கள் .யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். நமக்கு உதவி செய்து, 4,000 மில்லியன்களை நிதியுதவி வழங்கிய இந்தியாவை நாம் மதிக்கிறோம்.
ஆனால்,
காங்கேசந்துறைத் துறைமுக விவகாரத்தில் செயற்பட அனுமதி வழங்கப்படாததாலேயே இரண்டு வருடங்கள் வீணடிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, காங்கேசன்துறைத் துறைமுகம் மட்டுமல்லாமல், இராமேஸ்வரம் வழியாகப் பாலம் அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தால்தான் நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். அதற்கு நீங்கள் ஏன் உடன்பட மறுக்கிறீர்கள்?
அதேபோல், ஜனாதிபதி தனது உரையில் ஒரு நல்ல விஷயத்தைக் குறிப்பிட்டார்: சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கான பாராட்டுப் பரிசுகள் தொடர்பில் அறிவித்தார். அதாவது, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கு 100 மில்லியன், உலக தடகளப் போட்டிக்கு 100 மில்லியன், பொதுநலவாயப் போட்டிக்கு 75 மில்லியன், ஆசியப் போட்டிக்கு 50 மில்லியன் வழங்குவதாகத் தெரிவித்தார். விளையாட்டுத்துறை வரலாற்றில் மல்யுத்த(Wrestling) வீரர் ருமேஷ் தரங்க மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். போட்டிகள் முடிந்த பிறகுதான் இந்த அறிவிப்புகள் வெளியாகின்றன. இத்தகைய வெற்றிகளை ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கு உரிய நிதியுதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். ஆனால், யுபுன் அபேகோன் போன்ற வீரர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை அவமானப்படுத்தியதோடு, திறமையான வீராங்கனையான சபியா யமிக் போன்றோரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கியுள்ளார்கள். சிறந்த விளையாட்டு வீரர்களை இனம்கண்டு அவர்களுக்குரிய பணப் பரிசுகளையும் வெளிநாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.
அடுத்து, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நான்கு பில்லியன் (4,000 மில்லியன்) செலவில் ஆளில்லா வானூர்திகளை (Unmanned Aerial Vehicles) இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முன்னர் அமெரிக்காவிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்தவர்கள், இப்பொழுது இஸ்ரேலிடமிருந்து வானூர்திகளை வாங்க முற்படுகிறார்கள். எந்தவித விலைமனு கோரலும் (Tender) இன்றி, அவசரமான முறையில் நேரடி கொள்முதலாக (Direct Purchase) இது இரவோடிரவாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்ரேலிடமிருந்து எத்தகைய நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம்? இது ஈரானுக்கு எதிரான செயற்பாடல்லவா? நமது கடற்படையை அமெரிக்காவின் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் செயற்பாடாகவே இது அமைகிறது.நமது கடல் படையும்,விமானப்படையும் அமெரிக்காவிற்காக உளவு பார்ப்பதற்கு பாவிக்கப்படுகின்றன.
வெனிசுலா விவகாரத்தில் அங்குள்ள அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது,இங்கு வெளிநாட்டு அமைச்சு ஒரு முறையான அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.
பாலஸ்தீனம் மற்றும் காசா விவகாரத்தில் அங்குள்ள மக்களின் துயரங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு வானூர்திக் கொள்வனவுகளில் ஈடுபடுவதை விடுத்து, பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக உண்மையாகக் குரல் கொடுக்க வேண்டும். உண்மையான வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்.
(இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுகங்களுக்குப் பொறுப்பான)தற்போதைய அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் குறுக்கீடு செய்தனர்.
அந்த சந்தர்ப்பதில்,”பாராளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கிடக்கூடாது” என பாராளுமன்ற ஒழுங்குவிதிகளில் (Standing Order 92) உள்ளதாக டாக்டர் அர்ஜுனா ராமநாதன் எம்பி சுட்டிக்காட்டியபோது முறுகல் நிலை ஏற்பட்டது.பிரதி சபாநாயகர் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.)
இறுதியில்,நாட்டைப் அதற்காகப் பணம் ஒதுக்கிச் செய்வீர்களா இல்லையா? இத்தகைய தவறான முடிவுகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.
(தொகுப்பு : “விருட்சவேந்தன்”)



