வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக புதிய சமையலறை மற்றும் சமாதி புத்தர் சிலை திறப்பு

வெலிக்கடை சிறைச்சாலை பெண் பெண் அதிகாரிகளின் மற்றும் கைதிகளின் மன மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சமாதி புத்தர் சிலை’ திறப்பு விழா மற்றும் பெண் கைதிகளின் உணவுகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் தயாரித்து வழங்குவதற்காக அமைக்கப்பட்ட புதிய பெண் பிரிவின் சமையலறை திறப்பு விழா இன்று (17) காலை இடம்பெற்றது.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை பெண் பிரிவில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
• சமாதி புத்தர் சிலை திறப்பு: பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் பிரசாத் ஹேமந்த குமார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
• பெண் பிரிவு சமையலறை திறப்பு: ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைச் சிறைச்சாலை ஒன்றில் பெண் கைதிகளின் உணவுகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதல் சமையலறை இதுவாகும். திறப்பு விழாவிற்குப் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சமையலறைப் பணிகளைப் பார்வையிட்டனர்.
இந்த புதிய சமையலறையின் ஊடாக, பெண் கைதிகளுடன் சிறைக்குள் தங்கியிருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் தயாரிக்க முடியும். சிறைச்சாலை கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரும், பியூம் ஹைட்ரோ பவர் (Pam Hydro Power) நிறுவனத்தின் தலைவருமான மனோஜி வடுகொடபிட்டிய அவர்களின் நிதிப் பங்களிப்பில் இந்த சமையலறையும், சமாதி புத்தர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர்கள், வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் சமந்த மகாநாம, பெண் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் திஸ்னா காரியவசம் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகளும், சிறைச்சாலை கண்காணிப்புக் குழு உறுப்பினர்களும், பெண் கைதிகளும் கலந்துகொண்டனர்.



