மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்த சோகம்

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தளை யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு அருகில் முதலாவது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து புத்தர் சிலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய தனியார் துறை ஊழியரான இளைஞனை, பின்னால் வந்த அவரது நண்பர் உடனடியாக முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டிக்குப் பின்னால் தனது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மற்றைய நண்பர், யட்டவத்தை – எஹட்டுவெவ பகுதியில் வைத்து எதிரே வந்த கார் மற்றும் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 24 வயதுடைய விசேட அதிரடிப்படை வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புத்தர் சிலையில் மோதி முதலில் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாத்தளை – யட்டவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



