News

அன்புத் தந்தையே இந்த வருடம் உங்களது பிறந்தநாளுக்கு, உங்களது அருகில் இருந்து வாழ்த்துக் கூற முடியாமல் போய்விட்டது… மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு நாமல் உருக்கமான கடிதம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது 81வது பிறந்த தினத்தை இன்று (18) கொண்டாடுகிறார். தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த மகன் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்து உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.



தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எம்.பி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி.



அன்பான தந்தையே,



இந்த ஆண்டு உங்களது பிறந்தநாளுக்கு, உங்களது அருகில் இருந்து உங்களுக்கு வாழ்த்துக் கூற முடியாமல், குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இந்த கடினமான காலத்தை கடக்க நேர்ந்தாலும், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பால் உங்களுக்காக எனக்குள்ள அன்பும் மரியாதையும் எல்லையற்றது என்பதைப் பதிவிடுகிறேன்.



வாழ்வில் நாம் சற்றும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் நமக்கு பலமாய் இருப்பது நமது பெற்றோரிடமிருந்து கிடைத்த அன்பும், முன்மாதிரியும், வாழ்க்கைப் பாடங்களுமாகும்.



தந்தையே, தலைமைத்துவம் என்பது ஒரு பதவியை வகிப்பது மாத்திரம் அல்ல என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்தான். அது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும், சவால்களுக்கு மத்தியில் தளராது நிற்பதற்கும், தான் நம்பும் விடயங்களுக்காக அஞ்சாமல் குரல்கொடுப்பதற்கும் சொந்தமானது என்பதை உங்களது வாழ்விலிருந்து எமக்குக் காட்டினீர்கள்.



நமது நாட்டின் வரலாற்றில் மிக இருண்ட காலப்பகுதியில், தாய்நாட்டின் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்காக யாருக்கும் அஞ்சாமல் அமைதியை ஏற்படுத்திய துணிச்சலான தலைவர் நீங்கள்தான். அதற்காக நீங்கள் உத்வேகத்துடன் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கள், தியாகங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நீங்கள் தாங்கிக்கொண்ட பல விடயங்கள் குறித்து ஒரு மகனாக நான் அறிவேன்.



இன்று நான் எதிர்கொள்ளும் இந்தக் கடினமான காலத்தில், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பொறுமை, தைரியம் மற்றும் தளராத உறுதியின் மதிப்பை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டு வருகிறேன். ஒரு தந்தையின் இதயம் எவ்வளவு பலமானதாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன்.



உங்கள் இரத்த உறவிலிருந்து பெறப்பட்ட எனது பிள்ளைகள் இன்று உங்கள் அருகில் இருப்பார்கள். எனக்குப் பதிலாக அவர்கள் உங்களை அரவணைத்துக் கொள்வார்கள்.



கைகளால் உங்களை அரவணைக்க முடியாது என்பதால், எழுத்துக்களால் உங்களை அரவணைக்க எண்ணினேன். ஏனெனில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தூரத்தினால் உடைத்துவிட முடியாது.



உங்களது அன்பான மூத்த மகனான நான் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன வலிமை மற்றும் எல்லையற்ற அன்பை இவ்வாறாக எழுத்தில் பதிவிடுகிறேன்.



இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புத் தந்தையே!



ஆழ்ந்த அன்புடன்,



உங்களது அன்பான மூத்த மகன்,,,,,

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button