விவாகரத்துத் தீர்ப்பு வழங்க இலஞ்சம் பெற்ற காதி நீதிபதியும் மனைவியும் கைது

விவாகரத்துத் தீர்ப்பை விரைவாக வழங்குவதற்காக 65,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு வடக்கு காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்ச அல்லது ஊழல் சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காதி நீதிமன்றத்தின் செயலாளராகக் கடமையாற்றியவரும் இந்த நீதிபதியின் மனைவியே என இலஞ்ச ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றிற்குரிய தீர்ப்பை எவ்வித தாமதமுமின்றி விரைவாக வழங்குவதற்காக இவர்களால் இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இலஞ்ச அல்லது ஊழல் சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான நீதிபதியும் அவரது மனைவியும் நாளை (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.



