News

எமது தூய்மையான ஆட்சியை கண்டு ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தடையாக உள்ள, நாட்டில் நிலவும் காலாவதியான சட்டதிட்டங்களை விரைவாகத் திருத்துவதற்கும், வங்கித் துறை உள்ளிட்ட முதலீடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களிலும் பரந்த கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு இணைவாக, நாட்டிற்கு வருகை தந்திருந்த முன்னணி ஜப்பானிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அசோக ரன்வல, தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடியற்ற வெளிப்படைத்தன்மை காரணமாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் தற்போது இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வத்தையும் விருப்பத்தையும் காட்டி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால ஆட்சிகளின் போது நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கும், இடைத்தரகர்களின் மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் உள்ளானதை நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், முதலீடு செய்த பணத்தைக் கூட இழந்து அதனை மீளப் பெறுவதற்காக நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நேரிட்டமை சர்வதேசத்தின் முன் ஒரு நாடாகப் பெரும் அவமானத்திற்குரிய விடயமாகும் எனக் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதைய ஆட்சியின் கீழ் எந்தவொரு முதலீட்டாளரும் அரசியல்வாதிகளின் அல்லது அரச அதிகாரிகளின் பைகளை நிரப்பவோ அல்லது தரகுப் பணம் (கமிஷன்) வழங்கவோ தேவையில்லை என்றும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊடாக எந்தவொரு தராதரத்திலுள்ள நபருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் முழுமையான பாதுகாப்பான முதலீட்டுச் சூழல் நாட்டிற்குள் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button