கைதான பாதாள உலக குழுவினர்கள் பிரபல அரசியல்வாதிகளுடன் வைத்திருந்த தொடர்புகள் அம்பலமாகிறது 🔹🔸

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழுவினர்கள் பிரபல அரசியல் வாதிகளுடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
குறித்த சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய, கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையிலுள்ள பாதாள உலகக் குழுவினரிடம் இருந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் வெற்றிகண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிலர் கேள்வி எழுப்புகின்றனர் செவ்வந்தியை நாட்டிற்கு அழைத்து வந்து என்ன செய்தார்கள் என்று. நாம் ஏற்கனவே அவள் உள்ளிட்ட குழுவினூடாகச் சில அரசியல்வாதிகளுக்கு இருந்த பல தொடர்புகளைக் கண்டறிந்து முடித்துவிட்டோம்.
இது குறித்து மிக ஆழமாகவும் விரிவாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த விசாரணைகள் தற்போது மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன



